தடகள வீரர் கொலையாளியான 'கொள்கை' பின்னணி என்ன?

7

திருநெல்வேலி: நெல்லை ஐ.டி., ஊழியர் கவின் ஆணவ கொலையில் கைதான சுர்ஜித், சிறந்த தடகள வீரராக இருந்த நிலையில், ஜாதி, அரிவாள் கலாசாரம் போன்ற 'கொள்கை' தற்போது கொலை குற்றவாளியாக்கி உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபர் கவின் செல்வ கணேஷ், 27, நெல்லையில், ஜூலை 27ம் தேதி ஆணவ கொலை செய்யப்பட்டார்.

அவர் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், 24, இந்த கொலையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுர்ஜித் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் போலீஸ் எஸ்.ஐ.,யாக உள்ளனர்.

சுர்ஜித் பி.காம்., படித்தவர். பள்ளி காலத்திலிருந்தே சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். தடகள போட்டிகளில் மாநில சாம்பியனாகவும், பல கோப்பைகள், கேடயங்களையும் குவித்துள்ளார்.

கல்லுாரி படிப்பு முடிந்ததும், ஜிம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அதே சமயம், அரிவாள், ஆயுதங்களுடன் அவர் போஸ் கொடுக்கும் ஏராளமான படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆயுதங்கள், அரிவாள்களுடன் படங்கள் வெளியிடுவோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து எச்சரிக்கின்றனர். ஆனால், பெற்றோர் போலீசாக பணியாற்றுவதால், சுர்ஜித்தின் அரிவாள் போஸ் படங்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. அவரது பெற்றோரும் கவனிக்கவில்லை.

தடகளத்தில் மாநில சாம்பியனாக திகழ்ந்த சுர்ஜித் கைகளில், அரிவாள் பிடிக்க வைத்த 'கொள்கை' தான், அவரை கொலைக்கு இட்டுச்சென்றுள்ளது.

தாமிரபரணி தாலாட்டும் பசுமை மிக்க நெல்லையை ரத்தபூமியாக மாற்றி வரும் ஜாதி அமைப்புகள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லையில் விஷமாக பரவி வரும் ஜாதி கலாசாரம், ஒரு தடகள வீரரை கொலையாளியாக மாற்றியுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலீசாரின் கையில் தான் உள்ளது.

Advertisement