தேர்தல் ஆணையம் மீது ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடில்லி; ஓட்டுகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.
பார்லி வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; ஓட்டுகள் திருடப்படுகிறது என்பதை நாங்கள் பலமுறை கூறி வருகிறோம். இதற்கு வெளிப்படையான சான்றுகள் எங்களிடம் உள்ளன. 100 சதவீதம் ஆதாரத்துடன் நான் இதைச் சொல்கிறேன்.
மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எங்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பின்னர், எங்கள் சந்தேகங்கள் அதிகமாகின. குறிப்பாக 1கோடி பேர் புதிய வாக்காளர்களாக திடீரென சேர்க்கப்பட்டதை கண்டு, நாங்களே ஆறு மாதம் விசாரணையை தொடங்கினோம்.
அவர்கள் (தேர்தல் அதிகாரிகள்) ஓய்வு பெற்றாலும் கூட தப்பிக்க விடமாட்டோம். முக்கியமாக தேர்தல் ஆணையத்தில் யார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும், அவர்களை கண்டுபிடிப்போம்.
இவ்வாறு ராகுல் கூறினார்.










