நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்

புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புலவாயோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 149, நியூசிலாந்து 307 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 31/2 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்ஸ் (49), கேப்டன் கிரெய்க் எர்வின் (22), டிசிகா (29) ஓரளவு கைகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 165 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி, ஓ'ரூர்கே தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

பின், 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே (4) ஏமாற்றினார். நியூமன் நியாம்ஹுரி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹென்றி நிக்கோல்ஸ் (4*) வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 8/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை மாட் ஹென்றி வென்றார்.
இரண்டாவது டெஸ்ட், ஆக. 7ல் புலவாயோவில் துவங்குகிறது.

Advertisement