பொதுச்செயலர் ஆனதற்கு எதிரான வழக்கு நிராகரிக்க கோரிய இ.பி.எஸ்., மனு தள்ளுபடி
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், கடந்த 2022, ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே, பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சி விதிகளுக்கு புறம்பாக, பழனிசாமி பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சி விதிப்படி, அவரது நியமனம் செல்லாது' என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'மனுதாரர் சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினரே இல்லை. கட்சி செயல்பாடு குறித்து, அவர் கேள்வி எழுப்ப முடியாது. 'எம்.ஜி.ஆர்., மக்கள் கட்சி' சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இந்த வழக்கை தொடர, அவருக்கு உரிமை இல்லை. எனவே, அவரது வழக்கை நிராகரிக்க வேண்டும்' என, கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, 4வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் முன் நடந்தது. அப்போது மனுதாரர் சூரியமூர்த்தி ஆஜராகி, ''கடந்த 2008ம் ஆண்டு முதல், நான் அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கிறேன்.
'எம்.ஜி.ஆர்., மக்கள் கட்சி' சார்பில் தேர்தலில் போட்டியிட்ட போதிலும், அக்கட்சியில் நான் உறுப்பினராக இல்லை. அதனால், எனக்கு இந்த வழக்கை தொடர உரிமை உள்ளது,'' என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அ.தி.மு.க., உறுப்பினர்களால் தான் பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, கட்சி விதி உள்ளதாக, சூரியமூர்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், கட்சி விதிப்படி தான் பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்பது குறித்து, அவரது மனுவில் தெரிவிக்கப்படவில்லை.
இதைப் பற்றியும் சூரியமூர்த்தி அ.தி.மு.க., உறுப்பினரா, இல்லையா; பழனிசாமிக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்க அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதையெல்லாம், சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் விரிவான விசாரணை வாயிலாக மட்டுமே தீர்மானிக்க முடியும்.
எனவே, தற்போதைய சூழலில் சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க முடியாது. அந்த வழக்கை நிராகரிக்கக் கோரிய பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!
-
உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க கதிரியக்க ஊசி செலுத்தும் தென்னாப்ரிக்கா!
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது