காண்டாமிருகங்களை பாதுகாக்க கதிரியக்க ஊசி செலுத்தும் தென்னாப்ரிக்கா!

மோகோபேன்: காண்டாமிருகங்கள் கடத்தப்படுவதை தடுக்க, அவற்றின் கொம்புகளில் கதிரியக்க ஊசி செலுத்தும் முயற்சியை தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.



உலகளவில், 20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் 5 லட்சமாக இருந்த காண்டாமிருகங்கள், தற்போது 27,000 ஆக குறைந்துள்ளதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.அதன் கொம்புகளுக்கு அதிக மவுசு இருந்ததால், காண்டாமிருகங்கள் கடத்தப்பட்டு வேட்டையாடப்பட்டன. இதன் காரணமாக, அதன் எண்ணிக்கை பெருமளவு குறைந்தன.



இந்த சூழலில், அழிந்து வரும் காண்டாமிருகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தென் ஆப்ரிக்க விஞ்ஞானிகள், கடத்தப்படும் போது அவற்றை எளிதில் கண்டறியும் வகையில், அதன் கொம்புகளில் கதிரியக்க ஊசிகளை செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.அங்குள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலை, காண்டாமிருகங்களை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


'ரைசோடோப்' எனப்படும் இந்த திட்டத்தில், அணுசக்தி அதிகாரிகளின் ஆலோசனையுடன், கதிரியக்க 'ஐசோடோப்'புகளை காண்டா மிருகங்களின் கொம்புகளில் ஊசி வாயிலாக செலுத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து காண்டாமிருகங்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டது.



உயிரியல் பூங்காவில் இருந்த 20 காண்டாமிருகங்களுக்கு, கடந்தாண்டு இந்த ஊசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அது வெற்றி அடைந்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

ரைசோடோப் திட்டத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜேம்ஸ் லார்கின் கூறியதாவது:
காண்டாமிருகங்கள் கடத்தப்படும் போது, விமான நிலையங்கள், எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள ஸ்கேனர்கள் வாயிலாக, கொம்புகளில் உள்ள கதிர்வீச்சை அடையாளம் காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement