மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு

4


சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், வாதங்களை துவக்காததால், தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில், 1996 -2001ம் ஆண்டுகளில், மருங்காபுரி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாகவும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் செங்குட்டுவன்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.


தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 81 லட்சத்து 42,000 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.


இந்த வழக்கை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிமன்றம், அவரது மகன்கள், மகள், சகோதரர் மகளுக்கு தலா, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, 2023 அக்டோபரில் தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து, பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர்.இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை துவக்க மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.



இதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மகன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்தும், அவர்களை கைது செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Advertisement