ராகுல் போராட்டத்துக்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு

பெங்களூரு: லோக்சபா தேர்தல் விதிமீறலை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சுதந்திர பூங்காவில் நடக்கவுள்ள போராட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக அங்கு பல ஆண்டுகளாக இருந்த மரங்களை காங்கிரசார் வெட்டிச் சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று பெங்களூரில் அவரது தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது.
சுதந்திர பூங்காவில் நடக்கவுள்ள இந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உட்பட, பலரும் பங்கேற்பர்.
ராகுலின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதன்படி போலீஸ் அதிகாரிகள், முன்னேற்பாடுகளை செய்கின்றனர்.
போராட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால், சுதந்திர பூங்காவில் உள்ள மரங்களை வெட்டும்படி, உப்பார்பேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி உத்தரவிட்டு உள்ளார்.
எனவே போலீசார், மரங்களை வேருடன் வெட்டி அகற்றுகின்றனர். பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்களை வெட்டுவதை, பொது மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.
கடும் கண்டனம் எழுந்த நிலையில், பெயரளவில் இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி மீது மாநகராட்சி அதிகாரிகள் புகார் செய்து உள்ளனர்.