கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்த 'யுனிகார்ன் குதிரை'

நாமக்கல், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 'யுனிகார்ன் குதிரை, மான், காட்டெருமை' உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, வில்வித்தையில் சிறந்து விளங்கி, கொல்லிமலையை ஆண்ட மன்னராவார். இவர், தானத்தில் சிறந்து விளங்கியதால், கடையேழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு விழா, செம்மேட்டில், வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, கொல்லிமலை வாசலுார்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சாந்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி வல்வில் ஓரி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மலர் கண்காட்சியில், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யுனிகார்ன் குதிரை, மான் வடிவம், காட்டெருமை, காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கரடி, பறவைகள் உருவம் உள்ளிட்டவை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 50,000 மலர்களை கொண்டு, இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 23 அரசு துறைகள் சார்பில், அரசின் திட்டங்கள் குறித்த பணி விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவில், 20 அரசு பள்ளிகளை சேர்ந்த, 360 மாணவ, மாணவியர், கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, நெகிழி விழிப்புணர்வு, பக்தி பாடல், இயற்கையை மீட்போம் நடனம் மற்றும் நாட்டுப்புற கிராமிய இசைக்கலைஞர்களின் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை, பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
கொல்லிமலை அட்மா குழு தலைவர் செந்தில்முருகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, தாசில்தார் சந்திரா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement