புதுச்சேரியில் இருந்து மது கடத்தியவர் கைது
நாமகிரிப்பேட்டை, நாமரிபேட்டை ஒன்றியம், திம்மநாயக்கன்பட்டி வழியாக காரில், புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வருவதாக, மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று மங்களபுரம் போலீசார், ஆத்துார் பிரதான சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த, 'மாருதி 800' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, 100 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சிங்கிலியன்கோம்பை பகுதியை சேர்ந்த ராஜீ மகன் சரவணகுமார், 37, என்பது தெரிந்தது.
மேலும், விவசாயியான சரவணக்குமார், புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அருகில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மங்களபுரம் போலீசார் சரவணகுமாரை கைது செய்து, 100 மது பாட்டில், காரை பறிமுதல் செய்தனர்.