'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 48 முகாம்: அமைச்சர் மதிவேந்தன்

மோகனுார், ''மக்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 48 முகாம்கள் நடத்தப்படும்,'' என, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், மோகனுார் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடந்தது.


கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மாதிவேந்தன் முகாமை துவக்கி வைத்து, மனு அளித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கி பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், மூன்று முகாம்கள் வீதம், 15 வட்டாரங்களில், 45 முகாம்கள், நாமக்கல் மாநகராட்சியில், மூன்று முகாம்கள் என, மொத்தம், 48 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
வரும், 9ல், பிள்ளாநல்லுார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, 23ல், திருச்செங்கோடு தாலுகா விட்டம்பாளையம், 30ல், கொல்லிமலை செம்மேடு அரசு பழங்குடியினர் நடுநிலை பள்ளியில் முகாம் நடக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் உகந்த நாட்களில், காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லுாரி வளாகங்களில் முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி உள்பபட பலர் பங்கேற்றனர்.

Advertisement