அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் அபாண்டம் பகிரங்க மன்னிப்பு கோர பா.ஜ., வலியுறுத்தல்
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, 2019ல் உயிரிழந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020ல் நடந்த போராட்டத்திற்காக தன்னை மிரட்டினார் என, ராகுல் குற்றஞ்சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கடந்த 2020ல் மூன்று வேளாண் மசோதாக்களை பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்தது.
விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் சட்டமான நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் உச்ச நீதிமன்றம் அவற்றை அமல் படுத்த இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ளவில்லை என, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடியும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மறைந்த பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி மீது இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாக ராகுல் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதுவும் அவர் உயிரிழந்த ஓராண்டுக்குப் பின்னரே இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என தன்னை அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் நடந்த காங்கிரஸின் சட்ட கருத்தரங்க ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:
வேளாண் சட்டங் களுக்கு எதிரான போராட்டத்தை நான் முன்னெடுத்தபோது முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது. அப்போது மத்திய அரசு என்னை மிரட்ட அருண் ஜெட்லியை அனுப்பி வைத்தது.
'வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினால், உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என, அருண் ஜெட்லி என்னை மிரட்டினார். அப்போது நான், “நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என தெரியுமா?, ” என கேட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடல்நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அருண் ஜெட்லி சிகிச்சையில் இருந்தார்.
இறுதியில், 2019 ஆகஸ்டில் அவர் உயிரிழந்தார். அதன்பின், 2020 ஜூனில் மூன்று வேளாண் மசோதாக்களும் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டு, அந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டன.
பிரதமர் மோடியின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சியில் ராணுவ அமைச்சர், நிதியமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் அருண் ஜெட்லி. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும், சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார். மோடி அரசில் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்கள் கொண்டு வந்தபோது முக்கிய பங்கெடுத்தவர்.
@quote@
வேளாண் சட்டங்கள் எப்போது கொண்டு வரப்பட்டது என்பது ராகுலுக்கு தெரியுமா? பார்லிமென்டில் இந்த மசோதா அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே அருண் ஜெட்லி காலமாகிவிட்டார். எனவே, பச்சையாக பொய் கூறியதற்காக ஜெட்லியின் குடும்பத்தாரிடம் ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். அனுராக் தாக்கூர் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,quote
@quote@
பொதுவாக என் தந்தை யாரையும் மிரட்டும் சுபாவம் கொண்டவர் அல்ல. தீவிர ஜனநாயகவாதி. ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். பிரச்னை வந்தால் அதற்கு தீர்வு காண அனைவரையும் ஒன்றாக அழைத்து பேசுவார். அவரது இந்த பண்பு இன்றும் நினைவுகூரப்படுகிறது. அவர் மறைந்து ஓராண்டுக்கு பின், மிரட்டியதாக ராகுல் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. - ரோஹன் ஜெட்லி அருண் ஜெட்லி மகன்quote