ராசிபுரத்தில் நாயன்மார்கள் திருவீதி உலா

ராசிபுரம், ராசிபுரத்தில், வல்வில் ஓரியால் கட்டப்பட்ட அறம்வளர்த்த நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு ஆடி மாதத்தில் விழா எடுத்து வருகின்றனர். அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில் இவ்விழாவை கைலாசநாதர் சிவனடியார் திருகூட்ட அறக்கட்டளையினர், மூன்று நாட்கள் நடத்தி வருகின்றனர்.

முதல் நாள் விழா, வியாழக்கிழமை மாலை, 5:00 மணிக்கு குறும்ப நாயனார் குருபூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு விநாயகர், முருகன், நந்திபெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நேற்று காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து பன்னிரு திருமுறைகள் அடியார் பெருமக்களை கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக அரிமா சங்க மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். 9:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கோவில் முன் திருக்கோடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, கைலாசநாதர் நந்தி வாகனத்தில் அறம் வளர்த்த நாயகியுடன், முருகன், விநாயகர், சனீஸ்வரர், 63 நாயனர்மார்கள் புடைசூழ திருவீதி உலா வந்தார். பழைய பஸ் ஸ்டாண்ட், பெரிய கடைவீதி, அண்ணா சாலை வழியாக ஊர்வலம் சென்றது. பக்தர்களின், 'சிவ சிவா' கோஷம் வின்னை தொட்டது. அதுமட்டுமின்றி சிவனடியார்கள் நடனமாடி வந்தனர். பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர்.

Advertisement