ராசிபுரம் அருகே கார் பட்டறையில் தீ விபத்து: 7 கார், 2 டூவீலர் சேதம்

ராசிபுரம், ராசிபுரம் அருகே, கார் பட்டறை
யில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு கார்கள், இரண்டு டூவீலர்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கதிராநல்லுாரை சேர்ந்தவர் கோபால், 45; இவர், ஆண்டகளூர்கேட் பகுதியில், கார் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை, 6:00 மணிக்கு, இவரது கார் பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள், கோபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் டூவீலர்களில் தீப்பற்றி கொழுந்துவிட்டு
எரிந்துகொண்டிருந்தது.
இதுகுறித்து, ராசிபுரம் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், இரண்டு டூவீலர், ஏழு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. மேலும், உதிரி பாகங்களும் எரிந்தன. இவற்றின் மதிப்பு, 25 லட்சம் ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.
கார் செட்டுக்குள் இருந்த, 'சிசிடிவி' கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவையும் எரிந்துவிட்டதால், விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து, ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement