புகார் மீதான சமரச தீர்வுக்கு ரூ.40 கோடி கட்டிய என்.எஸ்.இ.,

மும்பை:தரவுகளை தவறாக கையாளுதல், விதிகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக சமரசம் செய்துகொள்ள, சந்தை கட்டுப்பாட்டாளரான செபிக்கு, என்.எஸ்.இ., எனும் தேசிய பங்குச் சந்தை 40.35 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 பிப்ரவரி முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில், மூன்றாம் தரப்பு நிறுவனத்துக்கு உரிய ஒப்பந்தம் இன்றி, நிறுவனங்களின் பங்கு விலை தொடர்பான விபரங்களை பகிர்ந்தது, என்.எஸ்.இ.,யின் உள் கமிட்டி விதித்த அபராதத்தை உரிய உறுப்பினர் குழுவின் ஒப்புதல் இன்றி தள்ளுபடி செய்தது, வாடிக்கையாளர் குறியீடுகளை மாற்றிய தரகு நிறுவனங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளை செபி முன்வைத்தது.
இதற்கு, கடந்த 2024 ஜனவரியில், 40.35 கோடி ரூபாயை செலுத்துவதுடன், இனி விதிமுறைகளுக்கு இணங்குவதாக என்.எஸ்.இ., முன்மொழிந்த சமரச தீர்வுகளை செபியின் உயர்மட்ட ஆலோசனை குழு ஏற்று கொண்டதுடன், உள் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைக்க அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், புதிய பங்கு வெளியீடுக்கு தயாராகி வரும் என்.எஸ்.இ., சமரச தீர்வுக்கு ஒப்புக்கொண்ட தொகையை செபிக்கு செலுத்தி உள்ளது.