டில்லி உஷ்ஷ்ஷ்: பங்களாவை மறுத்த மாயாவதி!

புதுடில்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் உ.பி., முதல்வருமான மாயாவதிக்கு, எண் 35, லோதி எஸ்டேட் என்கிற டில்லியின் முக்கிய பகுதியில், அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.
இந்த அரசு பங்களாவில், பல மாற்றங்களும் செய்யப்பட்டன; ஆனால், இந்த பங்களாவில் குடியேற மறுத்துவிட்டார் மாயாவதி. அரசு பங்களா ஒதுக்கும் கமிட்டிக்கு, தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இவரை அவரது வீட்டில் சந்தித்தார் மாயாவதி, 'எனக்கு அந்த லோதி எஸ்டேட் பங்களா வேண்டாம்; வேறு பங்களா ஒதுக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். 'எதற்கு அந்த பங்களா வேண்டாம் என்கிறீர்கள்... டில்லியில் முக்கிய பகுதியில் உள்ளது; மேலும், அனைத்து வசதிகளும் அங்கே உள்ளதே...' என, அமித் ஷா கேட்டாராம்.
மாயாவதியோ, 'அந்த பங்களாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. அத்துடன், அந்த பங்களாவில், காங்கிரசின் பிரியங்கா வசித்துள்ளார். எனவே, எனக்கு அந்த பங்களா வேண்டாம்' என, கூறினாராம். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமித் ஷா, 'நிச்சயம் வேறு பங்களா ஒதுக்குகிறேன்' என, வாக்குறுதி அளித்துள்ளாராம்.
கிட்டத்தட்ட, 23 ஆண்டுகளாக இந்த லோதி எஸ்டேட் பங்களாவில் வசித்து வந்துள்ளார் பிரியங்கா. அவர் எம்.பி., பதவியில் இல்லாதபோது, முன்னாள் பிரதமரின் மகள் மற்றும் அவருக்கு கருப்பு பூனை பாதுகாப்பு இருந்ததால், அரசு பங்களா காங்கிரஸ் ஆட்சி காலமான, 1997ல் ஒதுக்கப்பட்டது. பின், 2020ல் பா.ஜ., அரசு காலி செய்யும்படி உத்தரவிட்டது.
இந்த பங்களா விவகாரம், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை பெரிதும் பாதித்துள்ளது. 'வரும், 2027ல் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது; அப்போது மாயாவதி பா.ஜ.,விற்கு உதவுவார். அதனாலேயே, பங்களா மாறுதலுக்கு அமித் ஷா ஒப்புக் கொண்டுள்ளார்' என, அகிலேஷ் யாதவ் நொந்து போயுள்ளாராம்.