வர்த்தக துளிகள்

குவான்ட் மியூச்சுவல் பண்டு ஒப்புதல் அளித்தது செபி



இ ந்தியாவின் முதல் சிறப்பு முதலீட்டு பண்டு வெளியிடுவதற்கு, குவான்ட் மியூச்சுவல் பண்டு நிறுவனத்துக்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எஸ்.ஐ.எப்., எனப்படும் புதிய வகை பண்டு வெளியீட்டுக்கு அனுமதி பெற்ற, முதல் சொத்து மேலாண்மை நிறுவனமாகி உள்ளது. இம்மாதம் கியூ.எஸ்.ஐ.எப்.,ஈக்விட்டி லாங்டெர்ம் பண்டு வெளியிட உள்ள இந்நிறுவனம், வரும் மாதங்களில் கூடுதலாக பங்குகள் மற்றும் ஹைபிரிட் எஸ்.ஐ.எப்., பண்டுகளை வெளியிட திட்டமிட்டு உள்ளது.

புதிய பங்கு வெளியீடுக்கு அர்சில் விண்ணப்பம்



இ ந்தியாவின் முதல் சொத்து மறுகட்டுமான நிறுவனமான அர்சில், புதிய பங்கு வெளியீடுக்கு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, கடந்த 2002ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்களின் வராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த அவென்யூ கேப்பிடல் குழுமத்துக்கு சொந்தமான இந்நிறுவனம், முதலீட்டாளர்கள் வசமுள்ள 10.54 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டு உள்ளது.

சரஸ்வத் - நியூ இந்தியா வங்கி இணைப்பிற்கு ஒப்புதல்



மு ம்பையை தலைமையிடமாக கொண்ட சரஸ்வத் கூட்டுறவு வங்கியுடன், நியூ இந்தியா கூட்டுறவு வங்கியை இணைக்க ஆர்.பி.ஐ., ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஆக.,4 முதல் நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் சொத்துக்கள், கிளைகள் மற்றும் பொறுப்புகள் சரஸ்வத் வங்கி வசம் வரும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ரஞ்சித் பானு ஆகியோரால், 1968ல் பாம்பே தொழிலாளர் கூட்டுறவு வங்கியாக துவங்கப்பட்டது. இது கடந்த 1977ல், நியூ இந்தியா கூட்டுறவு வங்கியாக பெயர் மாறியது.

அனில் அம்பானி விவகாரம் ஈ.டி., முதல் கைது நடவடிக்கை



அ னில் அம்பானிக்கு எதிரான 3,000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில், அமலாக்கத் துறை, முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம், போலி வங்கி உத்தரவாதம் பெற உதவியதாக, 'பிஸ்வால் டிரேட்லிங்க்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வால் என்பவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத் துறை, நேற்று முன்தினம் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.

Advertisement