பஞ்சு வரத்து குறைவால் நுாற்பாலைகள் தவிப்பு கையிருப்பை நம்பியே இயங்கும் நிலை

திருப்பூர்:பஞ்சு வரத்து குறைந்ததால், இந்திய பருத்திக் கழகம் (சி.சி.ஐ.,) இருப்பு வைத்துள்ள பஞ்சை நம்பியே, நுாற்பாலைகள் இயங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
நடப்பு பருத்தி ஆண்டான 2024 அக்., - செப்., 2025ல், பஞ்சு வரத்து 302 லட்சம் பேல்களாக இருக்கும் என, மத்திய ஜவுளித்துறை கமிஷனரகம் கணக்கிட்டிருந்தது.
ஒரு பேல் என்பது 170 கி லோ கொண்டது. பஞ்சு தேவை, 305 லட்சம் பேல்கள் என்ற நிலையில், பழைய கையிருப்பு பஞ்சு, கடைசியில் கைகொடுக்கும் என்று, நுாற்பாலைகள் நம்பியிருந்தன.
கடந்த, 1ம் தேதி நிலவரப்படி, 300 லட்சம் பேல்களை கடந்து, பஞ்சு விற்பனையானது. இதில், 100 லட்சம் பேல்களை, இந்திய பருத்திக்கழகம் கொள்முதல் செய்திருந்தது.
ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியில், சீரான வளர்ச்சி இருந்ததால், பஞ்சுக்கான தேவை திடீரென அதிகரிக்கவில்லை; பற்றாக்குறையும் ஏற்படவில்லை. நுாற்பாலைகளின் பஞ்சு தேவைக்கு, செப்., மாத இறுதிவரை, இந்திய பருத்திக் கழகத்தை சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பருத்தி சீசன், செப்., மாதத்துடன் நிறைவுபெறும். அக்., மாத இறுதியில் இருந்து புதிதாக அறுவடையாகும் தரமான பஞ்சு வரத்து துவங்கும்.
தற்போது, தினமும் பஞ்சு வரத்து, 8,000 பேல்களாகக் குறைந்துள்ளன. இது, மேலும் குறையும்.
சி.சி.ஐ., இருப்பு வைத்துள்ள 100 லட்சம் பேல் பஞ்சில், 40 சதவீதம் விற்பனை நடந்திருக்கும். வரும் செப்., மாதம் வரையிலான பஞ்சு தேவைக்கு, சி.சி.ஐ.,யை சார்ந்து இயங்க வேண்டியிருக்கும்,' ' என்றார்.