கனரக வாகனங்களில் 'ஏர் ஹாரன்' பயன்பாட்டால் மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாகனங்களில் அதிக சப்தத்துடன் கூடிய 'ஏர் ஹார்ன்' பயன்பாட்டினால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி நகர பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு ஆட்டோ, பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயங்குகிறது.

கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக இரைச்சலுடன் கூடிய 'ஏர் ஹாரன்கள்' பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல், பஸ் நிலைய நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதியில் ஏர் ஹாரன் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் பயணிகள், கடை உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடம் கேட்கும் போது அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

நகரில் நுழைவதிலிருந்து பஸ் ஸ்டாண்டு வரை 2 கி.மீ., தொலைவிற்கும் மேல் அதிக சப்தத்துடன் 'ஏர் ஹாரன்' அடித்துக்கொண்டே செல்வதால் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. எனவே, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களில் 'ஏர் ஹாரன்' பயன்பாட்டினை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement