விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க அதிரடிப்படை அமைக்கிறது வனத்துறை

சென்னை : விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க, ஒரு கோடி ரூபாயில், சிறப்பு அதிரடிப்படை அமைக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், யானை, புலி போன்ற விலங்குகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவை வசிக்கும் வனப்பகுதியில், வெளியாட்கள் நுழைவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மின்வேலி அமைப்பது அதேபோல, வனப்பகுதிகளை ஒட்டிய விவசாய நிலங்களில், யானைகள் நுழையாமல் இருக்க, மின் வேலி அமைப்பது, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைப்பது, போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில், யானைகள் பாதிப்பு தொடர்கிறது. இதைத்தடுக்க, விவசாய நிலங்களுக்கு, மின் வேலிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில இடங்களில் விதிகள் மீறப்படுவதால், யானைகள் மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், புதிய திட்டத்தை வனத்துறை செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் வனத்தை ஒட்டிய கிராமங்கள், விவசாய நிலங்கள், யானைகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதில், மின்வேலி அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
யானைகள் நடமாடும் வழித்தடங்களை கண்டுபிடித்து, தொடர் கண்காணிப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் யானைகள் வருகையை துல்லியமாக கண்காணிக்க வேண்டியுள்ளது.
20 பேர் இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில், 20 பேர் அடங்கிய சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு, ஒரு கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. திண்டுக்கல்லை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.