அமெரிக்காவின் வரி அரசியலால் பாதிப்பு ஏற்படுமா? தேசத்துக்கு துணை நிற்க ஏற்றுமதியாளர்கள் உறுதி!

திருப்பூர்: அமெரிக்கா விதித்துள்ள வரி, இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி விளக்கியுள்ளார்.


அவர் கூறியதாவது:



இந்தியா - அமெரிக்கா இடையே தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணம், இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை, 25 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தான்.


இரு நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக பேச்சு, ஐந்து கட்டங்களை தொடர்ந்து இழுபறியாக நீடிப்பதால் அதிருப்தியை வெளிப்படுத்தி, தங்கள் தேவைக்கு ஏற்ப இந்தியாவை கையெழுத்திட வைக்கும் முயற்சியே என்பது தெளிவாகிறது.


கொரோனாவுக்கு பின், உற்பத்தி நிலைப்பாட்டை பல்வேறு வளர்ந்த பொருளாதார நாடுகளில் உள்ள நிறுவனங்கள், சீனாவில் இருந்து மாற்றும் முடிவை எடுத்து, இந்தியாவை விருப்ப நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்துள்ளன.


அவை தங்களின் உற்பத்தியை தமிழகம், உ.பி., தெலுங்கானா என, பல்வேறு மாநிலங்களில் துவங்கியுள்ளன. மேலும், பல நிறுவனங்கள் நம்நாட்டின் பல பகுதிகளில் தங்களின் உற்பத்தியை துவங்க உள்ளன.




கடும் பின்னடைவு அமெரிக்காவின் தற்போதைய வரிவிதிப்பு ஜவுளி துறைக்கான பின்னடைவு என்று சொன்னால் முற்றிலும் உண்மையே. அமெரிக்காவுக்கான இந்தியாவின் பிரதான ஏற்றுமதியில் ஜவுளி பொருட்கள் உள்ளன.



திருப்பூரை பொறுத்தமட்டில், இங்கு நடைபெறும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏறத்தாழ, 50 சதவீதம் அமெரிக்காவுக்கே செல்கிறது. தற்போது, வியட்நாம், வங்கதேசம், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா குறைவான வரியே விதித்துள்ளது.



அதே நேரத்தில், இந்தியாவின் பங்கை மூன்று நாடுகளும் தனதாக்கிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தால், உடனடியாக முடியாது. ஆனால், இந்த சூழல் நீடித்தால், ஆறு மாத காலத்தில் கடும் பின்னடைவை சந்திப்போம்.



இருப்பினும், சூழல் நீடிக்காது என்றே சொல்ல வேண்டும். வியட்நாமை பொறுத்தமட்டில் ஆடை உற்பத்திக்கான, 73 சதவீத துணி சீனாவிலிருந்தே வருகிறது. துணியின் உற்பத்தி குறித்து அமெரிக்காவுக்கான தரவுகளை அளிக்கும் போது, அவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பே அதிகம்.

இவ்வளவு வரி விதிப்பின் விளைவுகள் இறுதியாக நுகர்வோரை அல்லவா சென்றடையும்? அப்படியான சிக்கலை அமெரிக்க நுகர்வோர்கள் சந்திக்க துவங்கியுள்ளனர்; கொரோனா காலத்திற்கு பின், சற்று எழுந்த நுகர்வு மீண்டும் மந்தநிலையை நோக்கி நகர்கிறது.




அங்குள்ள பல்வேறு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் அதிருப்தியை அமெரிக்க அரசிடம் பதிவு செய்துஉள்ளன. இதனால் , அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரக்கூடிய வாய்ப்பே அதிகம்.



இதுபோன்ற நிலையை சீனா கடந்த மாதங்களில் எதிர்கொண்ட நேரத்தில், அந்நாட்டு
உற்பத்தியாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில், மின் கட்டண சலுகை, வங்கி கடனில் வட்டி குறைப்பு, ஏற்றுமதிக்கான சலுகைகளை உயர்த்துதல் போன்ற நடவடிக்கை காரணமாக, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு துணை நின்றது.



ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை வாயிலாக நல்ல தீர்வினை எட்டினர்.

அரசின் கடமை அதேபோல, மத்திய அரசும் உடனடியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை வாயிலாக நல்லதொரு தீர்வை எட்டும் வரை அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்குள் வேறு சந்தை வாய்ப்புகளை பெற்று, தங்கள் நிறுவனத்தை ஸ்திரப்படுத்தும் வரை தேவையான சலுகைகளை போர்க்கால அடிப்படையில்
செய்து தர வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக அரசுடன் நாங்கள் வலுவாக நிற்கிறோம். எங்களுக்கு வலுவை தொடர்ந்து அளிப்பது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement