விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் பாதசாரிகள் கடக்க தனி சிக்னல்

விழுப்புரம் : விழுப்புரம் நான்கு முனை சாலை சந்திப்பில், பாதசாரிகள் கடந்து செல்ல தனி சிக்னல் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நான்கு முனை சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் பகுதியில் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பகுதிக்கு நடந்து வரும் பொது மக்கள், மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர். சிக்னல் விழுந்து வாகனங்கள் செல்லும்போது, குறுக்கே ஆபத்தான வகையில் கடந்து செல்வது நீண்டகாலம் தொடர்ந்தது.

போக்குவரத்து சிக்னல் விதிகளின்படி, பாதசாரிகள் கடந்து செல்வதற்கும் நேரம் ஒதுக்கி, சிக்னல் வழங்க வேண்டும் என்று, விழுப்புரத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அகிலன், விழுப்புரம் கலெக்டர், முதல்வரின் தனி பிரிவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கும், தனி சிக்னல் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் சிக்னல் சந்திப்பில், பாதாசாரிகள் சாலையை கடந்து செல்வதற்கும், நான்கு மார்க்கங்களிலும் தனி கிரீன் சிக்னல் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு வழிகளிலும் வாகனங்களுக்கான ஒருசுற்று சிக்னல் முடிந்த உடன், சுமார் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை, பாதசாரிகளுக்கான கிரீன் சிக்னல் விழுகிறது. அப்போது, பாதசாரிகள் 30 நொடிகளில் கடந்து செல்லலாம். ஒலி பெருக்கி வாயிலாகவும் பாதசாரிகள் கடந்து செல்ல அறிவிப்பு வெளியாகிறது. இதனால், சிக்னல் சந்திப்பில், பாதசாரிகள் மகிழ்ச்சியுடன், அச்சமின்றி கடந்து சென்றனர்.

Advertisement