பழங்குடியினருக்கு வீடு கட்ட ரூ.69.28 கோடி ஒதுக்கீடு

சென்னை, : பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட, 69.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வீட்டு வசதி ஏற்படுத்தவும், 'பிரதம மந்திரியின் பெருந்திட்டம்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்துகிறது.


இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 21 மாவட்டங்களில் வசிக்கும், இருளர், காட்டுநாயக்கர், கோட்டா, குரும்பா, பனியன், தோடா போன்ற பழங்குடியின மக்கள் பயன்பெற தகுதியானவர்கள்.


இத்திட்டம், 2023 டிசம்பரில் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஒரு வீடு கட்ட, மத்திய அரசு 2 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.




தமிழகத்தில் மாநில அரசு பங்களிப்பு மற்றும் பல்வேறு திட்ட நிதியின் கீழ், சமவெளி பகுதிகளில் ஒரு வீட்டிற்கு 5.07 லட்சம் ரூபாய், மலைப்பகுதிகளுக்கு 5.73 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



கடந்த 2023 - 24ம் ஆண்டு 4,811 வீடுகள்; 2024 - 25ல், 10,168 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு 179.75 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். முதல் கட்டமாக, 2023 - 24ம் ஆண்டுக்கு 13.48 கோடி, 2024 - 25ம் ஆண்டுக்கு 41.57 கோடி ரூபாய் ஒதுக்கியது.




அதன் தொடர்ச்சியாக, தற்போது, 41.57 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. மாநில அரசு தன் பங்களிப்பாக, 27.71 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ளார்.

Advertisement