வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 குழந்தைகள் பலி
இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் மண்ணில் புதைந்து கிடந்த வெடிகுண்டை விளையாட்டு பொருள் என நினைத்து குழந்தைகள் எடுத்த போது அது வெடித்துச் சிதறியதில் 5 குழந்தைகள் பலியாகினர்; 12 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம், லக்கி மார்வாட் மாவட்டத்தில் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வயலில் வெடிக்காத குண்டு ஒன்று அவர்களுக்கு கிடைத்தது.
அதை விளையாட்டு பொருள் என நினைத்து தங்கள் தெருவுக்கு எடுத்துச் சென்று விளையாடினர். அப்போது அந்தக் குண்டு வெடித்துச் சிதறியது. இதில், ஐந்து குழந்தைகள் உயிரிழந்தனர்; 12 குழந்தைகள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் சில குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வெடிக்காத குண்டு வயலில் கிடந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைபர் பக்துங்க்வா தனிநாடு கோரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் வீசியதா அல்லது பயங்கரவாதிகளால் வீசப்பட்டதாக என விசாரிக்கின்றனர்.