ராணுவ சரக்கு விமானம் ஒப்படைத்தது 'ஏர்பஸ்'

மேட்ரிட்; ஸ்பெயினின் 'ஏர்பஸ்' நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி கடைசி, சி- - 295 ராணுவ போக்குவரத்து விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய விமானப் படைக்காக, சி- - 295 ராணுவ போக்குவரத்து விமானங்கள் 56 வாங்க, ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் 'ஏர்பஸ் டிபென்ஸ் ஸ்பேஸ்' நிறுவனத்துடன் மத்திய அரசு, 2021ல் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 16 விமானங்களை, ஏர் பஸ் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து பறக்கும் நிலையில் வழங்கும். மீதமுள்ள, 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

தொடர்ந்து, 11 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், 70 வீரர்கள் மற்றும் எட்டு டன் சரக்குகளை எடுத்துச் செல்லக் கூடியது. மேலும் வான்வழி எச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.

முதல் சி- - 295 விமானம் 2023 செப்டம்பரில் இந்தியாவிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி மற்றும் 16வது விமானத்தை ஏர்பஸ் நிறுவனம், இந்தியாவிடம் ஒப்படைத்தது. எஞ்சிய 40 விமானங்கள், குஜராத் மாநிலத்தின் வதோதரா நகரில் உள்ள டாடா ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன.

திட்டமிட்டதை விட இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே சி- - 295 ராணுவ விமானம் டெலிவரி செய்யப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement