அரியலுார் அருகே பாலம் பக்கவாட்டு சுவர் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

அரியலுார்; அரியலுார் அருகே, தொடர் மழையால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலுார் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில் உள்ள, கும்பகோணம்- - சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்து, பட்டேல் என்ற தனியார் நிறுவனம் சார்பில் சாலை அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காடுவெட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், காடுவெட்டி கிராமப் பகுதிகளில் இரு நாட்களாக பெய்த தொடர் மழையில், இப்பகுதியில் இருந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்டிருந்த, தண்ணீர் வெளியேறும் குழாயில் இருந்து மழைநீர் வழிந்தோடியது.
இதில், பக்கவாட்டு சுவர் கற்கள் நேற்று முன்தினம் இரவு பெயர்ந்து விழுந்தன. இதனால், மேம்பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாற்று வழியில் அனைத்து வகையிலான வாகனங்களும் இயக்கப்பட்டதால், கும்பகோணம் - சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் நாராயணன் நேற்று பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, தரமாக பாலம் அமைக்காததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் திட்ட இயக்குனர் நாராயணன் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, தரமாக மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.