'சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' அன்புமணி குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை : ''தமிழகத்தில், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சிப்காட்டில் பா.ம.க., தலைவர் அன்புமணி நடை பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:


சிப்காட்டில் குரோமிய கழிவுகளால் நிலத்தடி நீர் பாதித்து, புற்றுநோய், இருதய கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது. குரோமியத்தை தற்காலிகமாக அகற்ற, 15 கோடி ரூபாய் ஒதுக்கி, தி.மு.க., அரசு கணக்கு காட்டி ஏமாற்றி விட்டது.


முழு குரோமிய கழிவுகளையும் அகற்ற, 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்; பசுமை தீர்ப்பாய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.




'தமிழகத்தை மீட்டெடுப்போம், திராவிட மாடலுக்கு விடை கொடுப்போம்' என்ற என் பயணத்தை தமிழக பெண்கள் ஏற்று கொள்வர்.



மகளை பள்ளிக்கு அனுப்பினால் பத்திரமாக வீடு திரும்புவாரா என்ற பயத்தில் தான் பெற்றோர் உள்ளனர். நான்கு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர்.



தமிழக பெண்கள் வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக்கூடாது. கடந்த தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். தமிழகத்துக்கு மாற்றம் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



சோளிங்கரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு பிக் பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement