அரசு திவால் ஆகிவிட்டது; பணம் இல்லை என்கிறார் இபிஎஸ்

3

திருநெல்வேலி: 'அரசு திவால் ஆகிவிட்டது; அரசிடம் பணம் இல்லை' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட் 04) மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விவசாய மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:



இன்று இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்துள்ளது. அதிக விலை கொடுத்து இயற்கை பொருட்களை வாங்குகிறார்கள். அதிமுக அரசு அமைந்த பிறகு இயற்கை விவசாயத்துக்கு முடிந்த அளவில் உதவி செய்வோம்.

சிபில் ஸ்கோர்



இந்த அரசு திவால் ஆகிவிட்டது. அரசிடம் பணம் இல்லை. அதனால் தான் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க பணம் இல்லாமல் சிபில் ஸ்கோர் என்று ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து அவர்களை அலைக்கழித்தனர். இதுபற்றி நான் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததும் தமிழக அரசு சிபில் ஸ்கோர் கேட்பதை ரத்து செய்துள்ளது. 2017ல் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்ததும் அதிமுக ஆட்சி தான்.

குறைபாடுகள்



திமுக ஆட்சிக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் தருவதாக சொன்னார்கள். இதுவரை அதை கொடுக்கவில்லை. வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்கள். அதிமுக ஆட்சி இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நான் முதல்வராக இருந்தவரை யாருடைய தலையீடும் இல்லை. இந்த ஆட்சியில் இருக்கும் குறைபாடுகள் முதல்வருக்கே தெரியாது.

பதில் இல்லை



திடீரென்று எழுந்து கேள்வி கேட்டால் முதல்வருக்கு பதில் சொல்லத் தெரிவதில்லை.
முதல்வர் என்றால் அதிகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அதில் ஆர்வம் இருந்தது. குறிப்பாக விவசாயம், வணிகர்கள் பிரச்னையில் ஆர்வம் இருந்தது. எங்கள் ஆட்சியில் வணிகர்களை வாட்டி வதைக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் முறையாக வரி கட்டும் வணிகர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement