விவசாயி வீட்டில் புகுந்து 160 சவரன் நகை திருட்டு

1

புதுக்கோட்டை: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 160 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாயை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், 56. இவர், புதுக்கோட்டை, பாசில் நகரில் சொந்தமாக வீடு கட்டி, குடும்பத்துடன் வசிக்கிறார். இவரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, வீட்டை பூட்டிவிட்டு, முருகேசன் சொந்த ஊர் சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 160 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன.

கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே மிளகாய் பொடியையும் துாவிவிட்டு சென்றுள்ளனர். திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement