ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?

கர்நாடகாவில் பி.எம்.டி.சி., உட்பட நான்கு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றன. 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக முதல்வருடன் ஜூலை 7ல் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை. 'ஒரு வாரத்துக்கு பின் மீண்டும் ஆலோசனை நடத்தப்படும்' என்று முதல்வர் கூறியிருந்தும் நடத்தவில்லை.

பேச்சு தோல்வி இதையடுத்து, 'ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்' என்று அறிவித்தனர். கடைசி கட்ட முயற்சியாக, இரண்டு நாட்களுக்கு முன் தொழிற்சங்கங்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியும், பலன் இல்லை.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா, போக்குவரத்து துறை தொழிற்சங்கங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தொழிற்சங்கங்கள் தரப்பில், '2024 ஜனவரி முதல் தேதியில் இருந்து ஊதிய உயர்வு, 2020 முதல் 2023 வரையிலான 38 மாதங்களின் நிலுவை தொகையை கண்டிப்பாக வழங்க வேண்டும்' என்றனர். இதற்கு முதல்வர் சித்தராமையா எந்த உத்தரவாதமும் அளிக்காததால், பேச்சு தோல்வியில் முடிந்தது.

கூட்டம் முடிந்த பின், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பாராவ் கூறுகையில், ''முதல்வர் சித்தராமையா, 14 மாதங்களுக்கு மட்டுமே நிலுவை தொகை வழங்க முடியும் என்று கூறினார். அத்துடன், அடுத்த ஊதிய உயர்வு குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்,'' என்றார்.

ஐகோர்ட்டில் மனு இதற்கிடையில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சுனில் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் முத்கல், கமல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் தீக் ஷா அம்ரிதேஷ் வாதிட்டதாவது:

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிராக எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இதை மீறி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது, சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, போக்குவரத்து ஊழியர்கள், துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, உயர்மட்ட கூட்டம் நடத்த அறிவுறுத்த வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து துறை வக்கீல் வாதிட்டதாவது:

தொழிலாளர் துறை அதிகாரி, போக்குவரத்து துறை அமைச்சர், துறை செயலர் ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். இன்று (நேற்று) முதல்வர் சித்தராமையா தலைமையிலும் கூட்டம் நடந்தது.

அத்தடன் தொழிலாளர் தீர்ப்பாயத்தில், வரும் 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த விசாரணையை குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்களின் சம்பள திருத்தம், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கொரோனா காரணமாக, இதுவரை சம்பள திருத்தம் நடக்கவில்லை. கொரோனாவின் போது பணியில் இருந்து நீக்கப்பட்ட பல ஊழியர்கள், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தற்போது, சம்பள உயர்வு, நிலுவை தொகையை கேட்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியமற்றது. பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே, வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தரப்பு வக்கீல் நிலோபர் அக்பர் வாதிடுகையில், ''முதல்வர் சித்தராமையா காலை முதலே, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அத்துடன் மாநில அட்வகேட் ஜெனரல் புதுடில்லி சென்றுள்ளார். எனவே, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், 'அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லையா. தொழிற்சங்கங்களுடன் முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

'பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. எனவே, ஊழியர்களின் போராட்டத்தை ஒரு நாள் தள்ளி வைத்து கொள்ளுங்கள். இது தொடர்பாக அரசு, போக்குவரத்து துறை, தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்' என கூறி, விசாரணையை இன்று (5ம் தேதி) ஒத்தி வைத்தனர்.

இதனால், தொழிற்சங்கங்களுடன் முதல்வர் சித்தராமையா இன்று பேச்சு நடத்துவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

வேலை நிறுத்தம் துவங்கினால், பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நாளை துவங்கினால், பஸ்கள் ஓடுமா என பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement