பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

3

திருவனந்தபுரம்: பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகனும்,நடிகருமான ஷானவாஸ் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 71.



திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் அவர் காலமானார். அவரின் மறைவை அறிந்த கேரள திரையுலக கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 96 படங்களில் ஷானவாஸ் நடித்துள்ளார். 1981ம் ஆண்டு சினிமாவில் அவர் அறிமுகமானார். சென்னை நியூ கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, பாலசந்திர மேனன் தான் இயக்கிய பிரேம கீதங்கள் படத்தில் ஷானவாசை அறிமுகப்படுத்தினார்.


தொடர்ந்து, கதாநாயகன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரின் கடைசி படம் ஜனகணமன ஆகும். 1989ம் ஆண்டு பிரேம் நசீர் காலமான பின்னர் சில ஆண்டுகள் தமது நடிப்பை தொடர்ந்தார். பின்னர், திரைத்துறையில் இருந்து சில காலம் விலகி வளைகுடாவில் கப்பல் நிறுவனம் ஒன்றில் நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தார். சினிமாவில் சிறுசிறுவேடங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.


மறைந்த ஷானவாசுக்கு ஆயிஷா பீவி என்ற மனைவியும் அஜித் கான், ஷமீர் கான் என்ற மகன்களும் உள்ளனர். ஷானவாஸ் இறுதிச் சடங்கு இன்று (ஆக.5) மாலை 5 மணி அளவில் பாளையம் ஜூம்மா மசூதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement