டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது

12


புதுடில்லி: டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்த, வங்க தேசத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக கூறி போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், அன்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

இந்த சூழலில், டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் 5 பேர் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு வங்கதேச நாட்டினர் என்பது தெரியவந்தது. தற்போது அவர்களை கைது செய்து, ஏதற்காக செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்தீர்கள் என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது குறித்து போலீசார் கூறியதாவது: அவர்கள் அனைவரின் 20 முதல் 25 வயதுடையவர்கள். அவர்கள் டில்லியில் கூலி தொழிலாளியாக பணி செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து வங்கதேச நாட்டின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


அவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள். அவர்கள் செங்கோட்டை வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர். அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்



சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக கூறி போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முன்னதாக, பாதுகாப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக செங்கோட்டை வளாகத்தில், சிறப்பு பிரிவு அதிகாரிகள் போலி வெடிகுண்டை மறைத்து வைத்து இருந்தனர்.



இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கண்டுபிடிக்க தவறிவிட்டனர். இதனால் உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement