நியூசிலாந்து அணி அபாரம்: 125 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே

புலவாயோ: நியூசிலாந்து பவுலர்கள் அசத்த, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 125 ரன்னுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. புலவாயோவில் 2வது டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (0), நிக் வெல்ச் (11), சீன் வில்லியம்ஸ் (11), கேப்டன் கிரெய்க் எர்வின் (7) ஏமாற்றினர். பிரண்டன் டெய்லர் (44), டிசிகா (33*) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 125 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 5, ஜகாரி 4 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே, வில் யங் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்த போது வில் யங் (74) அவுட்டானார். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 174/1 ரன் எடுத்திருந்தது. கான்வே (79), ஜேக்கப் டபி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
பிரண்டன் டெய்லர் வருகை
ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர் 39, கடந்த 2004ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்தார். கடந்த 2022ல் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டம் தொடர்பான பிரச்னையில் சிக்கிய இவருக்கு மூன்றரை ஆண்டு ஐ.சி.சி., தடை விதித்தது. சமீபத்தில் இவரது தடை காலம் முடிந்ததையடுத்து நேற்று புலவாயோவில் நடந்த 2வது டெஸ்டில் விளையாடினார். இதனையடுத்து நீண்ட காலம் டெஸ்டில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஆண்டர்சனை (21 ஆண்டு, 51 நாள்) முந்தி 12வது இடம் பிடித்தார் டெய்லர் (21 ஆண்டு, 93 நாள்). இங்கிலாந்தின் வில்பிரெட் ரோட்ஸ் (30 ஆண்டு, 315 நாள்) முதலிடத்தில் உள்ளார்.