கன்னியாகுமரி படகு சவாரி; ஆன்லைன் டிக்கெட் அறிமுகம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணியருக்கு ஆன்லைன் டிக்கெட் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.


கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணியர் படகுகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பூம்புகார் போக்குவரத்து கழகம் இந்த படகுகளை இயக்குகிறது.




தற்போது விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை இணைத்து கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதை பார்க்கும் ஆர்வத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் கன்னியாகுமரி வருகின்றனர்.



அவர்கள் பெரும்பாலான நாட்கள் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.



இதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் டிக்கெட் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்த வசதி நேற்று முதல் அறிமுகமானது. www.pscks.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அமைச்சர் மனோ தங்கராஜ் இதை நேற்று தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் கலெக்டர் அழகு மீனா, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் ஸ்டீபன், ஆணையர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement