பெண் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு மறுப்பு நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில் 33 கவுன்சிலர்களில் 18 கவுன்சிலர்கள் பெண்களாக இருந்தும், எங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என பெண் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.

திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நகர மன்ற சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் சரவணன் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:

திண்டிவனம் - செஞ்சி ரோடு பஸ் ஸ்டாப்பிங் எதிரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும். ரோஷணை காலனியில் உள்ள கழிவறையை இடித்து பல மாதங்களாகியும், புதிய கழிவறை கட்டித்தரப்படவில்லை.

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் நகராட்சி சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மின் தகன மையத்தை விரைவில் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரத்தில் பல வார்டுகளில் குடிநீர் பிரச்னை இருப்பதால், டேங்கர் லாரி மூலம் தேவைப்படும் வார்டுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கூட்டத்தில் பா.ம.க., கவுன்சிலர் ேஹமமாலினி பேசுகையில், 'நகராட்சியில் 33 கவுன்சிலர்களில் 18 கவுன்சிலர்கள் பெண்களாக இருந்தும், பெண் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், ஆண் கவுன்சிலர்களே பேசுகின்றனர்' என்றார்.

இதே கருத்தை தி.மு.க., கவுன்சிலர் ரேணுகா உள்ளிட்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த கமிஷனர் சரவணன், 'வரும் காலங்களில் ஒன்றாவது வார்டிருந்து 33வது வார்டு கவுன்சிலர்கள் வரை ஒன்றன் பின் ஒன்றாக பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்' என்றார்.

கூட்டம் நடைபெறும்போதே பாதி கவுன்சிலர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறினர். காரணம் கேட்டபோது, வார்டு பிரச்னை பற்றி பல முறை கோரிக்கை வைத்தும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் வீணாக ஏன் உட்கார்ந்திருக்க வேண்டும் என்பதால் வெளியே செல்வதாக கூறிச் சென்றனர்.

Advertisement