அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!

88

ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் பேசிப் பார்த்தார். ஆனால் டிரம்பின் கோரிக்கைகளை ரஷ்யா கண்டு கொள்வதாக இல்லை. இதனால் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், அந்த நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு வரி விதிப்பதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.



முதலில் 25 சதவீதம் வரிவிதிப்பை அறிவித்த டிரம்ப், அடுத்த சில நாட்களில் மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார். இதனால் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களின் மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கை நேர்மையற்றது; நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளது.


ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், உரம் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் அமெரிக்கா, இந்தியாவை மட்டும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு, பிரேசில், சீனா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு, சர்வதேச சட்ட விதிமுறைகள், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம் மட்டுமின்றி, வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.


இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில், அமெரிக்க வேளாண் உற்பத்தி பொருட்கள், பால் பொருட்களை இந்தியாவில் வரி விதிப்பின்றி விற்பனை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது.
அதற்கு இந்தியா முற்றிலும் மறுத்துவிட்டது. இந்தியா, வேளாண்மை மற்றும் அது சார்ந்த உப தொழில்களான பால் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு போன்றவற்றை பிரதானமாக சார்ந்து இருக்கும் நாடு என்பதே அதற்கு காரணம்.


டில்லியில் இரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நலன்களை பாதுகாத்தே தீருவோம். அதற்காக எத்தகைய விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்கு இந்தியா தயாராக இருக்கிறது' என்று உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இத்தகைய திட்டவட்டமான அறிவிப்பு, அமெரிக்காவுக்கு அளித்த நேரடி பதிலாக கருதப்படுகிறது.


இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி தரும் நோக்கத்துடன் தான் டிரம்ப் இவ்வாறு வரி விதிப்பை செய்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியர் என்ற முறையில் நாம் ஒவ்வொருவரும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

கருத்து சொல்லுங்க வாசகர்களே!




அமெரிக்க வரிவிதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த விவகாரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதலாமா,
மத்திய அரசின் நடவடிக்கைக்கு தேசபக்தி கொண்ட இந்தியராக நாம் எந்த வகையில் ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து, வாசகர்கள் ஆகிய நீங்கள் கருத்து தெரிவிக்க அழைக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் வாசகர்களே!

Advertisement