அன்புமணி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

7

மாமல்லபுரம்: அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடருவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், அவரின் மகன் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஆக.19ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ஒரு பக்கம் ராமதாஸ் அறிவிக்க, மறுபுறம் தாமும் ஆக.9ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார்.


அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவை அடுத்து, திட்டமிட்டபடி இன்று தாம் அறிவித்த பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி தொடங்கி உள்ளார்.


கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என அழைப்பிதழ் அனுப்பப்பட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்ட பேனரில், ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.


ராமதாசுக்காக பொதுக்குழு கூட்ட மேடையில் காலி இருக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறும் பொருட்டும், சட்டசபை தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணி குறித்த நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.


கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பாமக தலைவராக தேர்வான அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் முடிந்தது. எனவே, பாமகவின் தலைவராக மீண்டும் அன்புமணியை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. பாமக கட்சி தொடங்கியதில் இருந்து, ராமதாஸ் இல்லாமல் நடத்தப்படும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.



பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;


* பாமக தலைவராக அன்புமணி தான் மேலும் ஓராண்டு தொடருவார். உட்கட்சி தேர்தல் நடத்தலாம்.


* பாமக பொருளாளராக திலக பாமா, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர தீர்மானம் நிறைவேற்றம்.


* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதை வெளியிட வேண்டும்.


* வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.


*தமிழகத்தில் மின்கட்டணத்தை நிறைவேற்ற வேண்டும்.


*காவிரி, கொள்ளிடம், பாலாறு ஆகிய ஆறுகள் இடையே தடுப்பணை கட்ட வேண்டும்.

Advertisement