கோப்பை வென்றது நியூசிலாந்து: ஜிம்பாப்வே இன்னிங்ஸ் தோல்வி

புலவாயோ: இரண்டாவது டெஸ்டில் அசத்திய நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. சொந்த மண்ணில் ஜிம்பாப்வே ஏமாற்றியது.
ஜிம்பாப்வே சென்ற நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடந்தது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 125 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 601/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.


மூன்றாம் நாள் ஆட்டத்தில் 476 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (0), பிரண்டன் டெய்லர் (7), சீன் வில்லியம்ஸ் (9), கேப்டன் கிரெய்க் எர்வின் (17), சிக்கந்தர் ராஜா (4) உள்ளிட்டோர் ஏமாற்றினர். நிக் வெல்ச் (47*) ஆறுதல் தந்தனார்.
ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 117 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஜகாரி 5, மாட் ஹென்றி, ஜேக்கப் டபி தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் கான்வே வென்றார். தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் மாட் ஹென்றி (16 விக்.,) தட்டிச் சென்றார்.


இமாலய வெற்றி
நியூசிலாந்து அணி, டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த இன்னிங்ஸ் வெற்றியை (இன்னிங்ஸ், 359 ரன்) பதிவு செய்தது. இதற்கு முன், 2012ல் நேப்பியரில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ், 301 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.


* சிறந்த இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 3வது இடம் பிடித்தது நியூசிலாந்து. முதலிரண்டு இடங்களில் இங்கிலாந்து (இன்னிங்ஸ், 579 ரன், எதிர்: ஆஸி., 1938, இடம்: ஓவல்), ஆஸ்திரேலியா (இன்னிங்ஸ், 360 ரன், எதிர்: தெ.ஆப்., 2002, இடம்: ஜோகனஸ்பர்க்) உள்ளன.

Advertisement