பும்ராவுக்கு சலுகை அளிப்பது சரியா: கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு

மும்பை: பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.


இந்திய அணியின் 'வேகப்புயல்' பும்ரா 31. முதுகுப்பகுதி 'ஆப்பரேஷனில்' இருந்து மீண்டார். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில், மூன்றில் மட்டுமே பங்கேற்க முடியும் என முன்கூட்டியே தெரிவித்தார். முதல் (லீட்ஸ், தோல்வி), மூன்றாவது (லார்ட்ஸ், தோல்வி), நான்காவது (மான்செஸ்டர், டிரா) டெஸ்டில் பங்கேற்றார். இதில் இரு முறை 5 விக்கெட் உட்பட 14 விக்கெட் சாய்த்தார். இவர் இடம் பெறாத 2வது (பர்மிங்ஹாம்), 5வது டெஸ்டில் (ஓவல்) இந்தியா வென்றது. மறுபக்கம் சிராஜ் அனைத்து டெஸ்டிலும் பங்கேற்று 23 விக்கெட் வீழ்த்தினார். 25 நாள் விளையாடிய சிராஜ், தொடர் 2-2 என சமன் ஆக முக்கிய காரணமாக இருந்தார்.

பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு மட்டும் 'ரெஸ்ட்' கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் காலங்களில் இவரை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை. தானாகவே டெஸ்டில் இருந்து ஓய்வு பெறலாம். இது பற்றி இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:


சந்தீப் பாட்டீல்: ஒரு வீரருக்கு சலுகை அளிக்க பி.சி.சி.ஐ., எப்படி ஒப்புக் கொள்கிறது. கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழுவினரைவிட 'பிசியோதெரபிஸ்ட்' பெரிய நபரா? இவரது அறிவுறுத்தலின்படி ஒருவருக்கு 'ரெஸ்ட்' கொடுப்பது சரியல்ல.

போர் வீரருக்கு சமம்: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுபவர், நாட்டுக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். போர் வீரரை போன்றவர். எனது காலத்தில் கவாஸ்கர் அனைத்து நாளிலும் அசராமல் பேட் செய்துள்ளார். டெஸ்ட் தொடரின் பெரும்பாலான நாள் கபில் தேவ் பந்துவீசியுள்ளார். வலை பயிற்சியிலும் பந்துவீசுவார். அவர்கள் ஒருபோதும் 'பிரேக்' கேட்டது கிடையாது. 16 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடியுள்ளனர். 1981ல் ஆஸ்திரேலிய பயணத்தின் போது, எனது தலையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் அடுத்த போட்டியில் பங்கேற்றேன்.


இது நாடகமா: பணிச்சுமை என்பது முட்டாள்தனமானது. ஒரு வீரர் உடற்தகுயுடன் இருக்கிறாரா அல்லது உடற்தகுதி இல்லாமல் இருக்கிறாரா என்ற அடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும். நவீன காலத்தில் வீரர்கள் காயத்தில் இருந்து மீள அனைத்து வசதிகளும் உள்ளன. எங்களது காலத்தில் இந்த வசதிகள் எல்லாம் இல்லை. நாட்டுக்காக காயத்துடன் மகிழ்ச்சியாக விளையாடினோம். 'நாடகம்' நடிக்கவில்லை.


ரகானே: மூன்று டெஸ்டில் மட்டுமே பங்கேற்க முடியும் என கேப்டன், அணி நிர்வாகத்திடம் சொல்லும் துணிச்சல் பும்ராவுக்கு இருந்தது. இதே போன்று வேறு சில வீரர்கள் சொல்லி இருந்தால், அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பர். பும்ராவை 5 டெஸ்டிலும் விளையாட வேண்டுமென விரும்பினால், அவருக்கு தொடர்ந்து அதிக ஓவர் கொடுக்க கூடாது. ஒரே நேரத்தில் 3 அல்லது 4 ஓவர் மட்டும் வீச சொல்லலாம்.

கபில் தேவ்: இங்கிலாந்து தொடரின் 'ஹீரோ' சிராஜ் தான். பும்ரா இடம் பெறாத நிலையில் இந்திய பந்துவீச்சை சிறப்பாக வழிநடத்தினார். ஓய்வு இல்லாமல் பந்துவீசும் இவரை போன்ற வீரர்கள் தான் இந்திய அணிக்கு தேவை.


@quote@

ஆங்கிலம் அவசியமா



சிராஜ், ஆகாஷ் தீப் உள்ளிட்ட சில இந்திய வீரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது. இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறுகையில்,''ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன், இந்தியாவுக்கு 4 விக்கெட் தேவைப்பட்டன. இந்திய பவுலர்கள் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, வெற்றி தேடித்தந்தனர். நமக்கு ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுவதில் சிரமம் இருக்கலாம். ஆனால், கிரிக்கெட் களத்தில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியமில்லை என்பதை நமது அணியினர் நிரூபித்தனர்,''என்றார். quote

Advertisement