இந்தியாவுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி நஷ்டம்

2

இஸ்லாமாபாத் : சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கு பதிலடியாக இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தன் வான்வெளியை மூடியது. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு ரூ 410 கோடி ( இந்திய மதிப்பில் 127 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


ஒரு நாட்டின் வான்வெளியை பயன்படுத்துவதற்கு 'ஓவர்பிளையிங்' எனப்படும், அந்நாட்டின் மீது பறப்பதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு காரணம் வான்வெளியில் பறக்கும் போது அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் வழிகாட்டுதல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்கும். சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிப்படி இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சுற்றுலா பயணியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் பங்கிடுவதற்காக போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்தது. உடனே பாகிஸ்தான் தன் வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியது. முதல்கட்டமாக, ஏப்ரல் 24 முதல் ஜூன் 20 வரை இந்த தடை அமலில் இருந்தது. அது ஆக., 24 வரை நீட்டிக்கப்பட்டது.


தடைக்கு முன் தினமும் 100 முதல் 150 விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்தின. அதற்காக கட்டணங்கள் செலுத்தின. தடையால் இந்த வருவாயை பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் இழந்தது.


இது குறித்து அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் பார்லிமென்ட்டுக்கு வழங்கிய தகவலில், 'ஏப்ரல் -- ஜூன் காலக்கட்டத்தில் 'ஓவர்பிளையிங்' கட்டணம் கடுமையாக சரிந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 850 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு அதில் 410 கோடி ரூபாய்(பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) குறைந்துள்ளது' என கூறியுள்ளார்.

Advertisement