ரிஷாப் யாதவ் 'வெண்கலம்': உலக விளையாட்டு வில்வித்தையில்

செங்டு: உலக விளையாட்டு வில்வித்தையில் இந்தியாவின் ரிஷாப் யாதவ் வெண்கலம் வென்றார்.

சீனாவில், உலக விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர் (10 வீரர், 7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரிஷாப் யாதவ் 145-147 என, அமெரிக்காவின் கர்டிஸ் லீ பிராட்னாக்சிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 145-148 என நெதர்லாந்தின் மைக் ஷ்லோசரிடம் வீழ்ந்தார்.

அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், அபிஷேக் சர்மா மோதினர். இதில் ரிஷாப் யாதவ் 149-147 (30-29, 29-29, 30-30, 30-29, 30-30) என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது.

பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் பர்னீத் கவுர், மதுரா, காலிறுதியோடு வெளியேறினர். கலப்பு அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி 151-154 என, தென் கொரிய ஜோடியிடம் தோல்வியடைந்தது.


6வது பதக்கம்
இது, உலக விளையாட்டு வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 6வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்துள்ளது. ஏற்கனவே பிரகாஷ் படுகோன் (பாட்மின்டன், வெண்கலம், 1981), சுமிதா லஹா (பவர்லிப்டிங், வெள்ளி, 1989), ரேகா மால் (பவர்லிப்டிங், வெண்கலம், 1989), ஆதித்யா மேத்தா (ஸ்னுாக்கர், தங்கம், 2013), ஜோதி-அபிஷேக் (வில்வித்தை, வெண்கலம், 2022) பதக்கம் வென்றிருந்தனர்.

Advertisement