பாக்., ராணுவம் தாக்குதலில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பெஷாவர்:ஆப்கன் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த மாகாணத்தில் பலுச் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகிய பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்சில் பெஷாவர் நோக்கி சென்ற பயணியர் ரயிலை கடத்தினர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் சோப் மாவட்டத்தில் உள்ள சம்பசா பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் ஆக., 7 மற்றும் 8ம் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்ற 33 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது.

இதேபோல் சம்பசா எல்லையையொட்டி மற்றொரு பகுதிகளில் நேற்று முன்தினம் துவங்கி நேற்று அதிகாலை வரை நடந்த துப்பாக்கி சண்டையில் 14 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாக்.,ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாக்., அரசுடன் அடிக்கடி உள்நாட்டு போரில் ஈடுபட்ட டி.டி.பி., எனப்படும் பாகிஸ்தானின் பழங்குடி பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்- இ - தலிபான் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த 2022ல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை டி.டி.பி., விலக்கியது. இதை தொடர்ந்து பாக்.,கின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வாவில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது.

Advertisement