கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி

கின்ஷாசா:கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், காங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது.

சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டோவின் ஆதரவு பெற்ற, 'எம் - 23' கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.

காங்கோ நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதலில் பலர் கொல்லப்படுகின்றனர். மோதல் காரணமாக லட்சக் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் சிறார் உட்பட இளைஞர்களை தங்கள் சட்டவிரோத அமைப்பில் சேர கிளர்ச்சிப்படை கட்டாயப்படுத்தி வருகிறது.

மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், கத்தார் தலைமையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதிப் பேச்சு நடந்து வருகிறது.

ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் காங்கோவையும் கிளர்ச்சியாளர்களையும் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட கத்தார் முயற்சித்து வருகிறது. பொதுமக்களைப் பாதுகாப்பதும், மோதலால் இடம்பெயர்ந்தவர்களை பாதுகாப்பாக நாடு திரும்ப வைப்பதும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.இந்தநிலையில், நியாபோரோங்கோ, லும்பிஷி உள்ளிட்ட கிராமங்களில், 'எம் - 23' கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குழந்தைகள் உட்பட 80 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement