சிங்கபெருமாள்கோவில் ரயில்வே கேட் சாலையை சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தங்களின் பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு, இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

இச்சாலையில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில், ரயில்வே கடவுப்பாதை உள்ளது.

இங்கு, ரயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தார்ச்சாலை பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் இடையே உள்ள 100 மீட்டர் சாலை, ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல மாதங்களாக இந்த சாலை மோசமான நிலையில் உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலை மோசமான நிலையில் உள்ளதால், 'சிக்னல்' கிடைக்கும் போதும் வாகனங்கள் விரைவாக கடக்க முடியாமல், அடுத்து சிக்னல் மாறும் போது, பல வாகனங்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement