வேளச்சேரியில் சீரான மின் சப்ளைக்கு மின் நிலையத்தின் திறன் அதிகரிப்பு

வேளச்சேரி:வேளச்சேரி பகுதிக்கு சீரான மின் வினியோகம் வழங்க, துணை மின் நிலையத்தின் திறன், 16 மெகா வோல்ட் ஆம்பியராக அதிகரிக்கப்பட உள்ளது.

-வேளச்சேரி துணை மின் நிலையம், 110 கே.வி., திறன் உடையது. இங்கிருந்து, வேளச்சேரி சுற்று வட்டாரத்தில், 70,000 இணைப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, 360 மின்மாற்றிகள், 8,000 மின்பகிர்மான பெட்டிகள் உள்ளன.

வேளச்சேரி அபார வளர்ச்சி அடைந்துள்ளதால், அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே, கூடுதலாக ஒரு துணை மின் நிலையம் தேவைப்படுகிறது.

மின் வாரியம் தயாராக இருந்தும், இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மின் தடையை தவிர்க்கவும், அதிக மின் பயன்பாடு தேவைப்படுவதாலும், வேளச்சேரி பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வேளச்சேரி துணை மின் நிலையம், 7 கோடி ரூபாயில், 16 எம்.வி.ஏ., எனும் மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட உள்ளது.

இதில் இருந்து பிரித்து அனுப்பப்படும் மின்பகிர்வால், 70,000 இணைப்புகளுக்கு சீரான மின் வினியோகம் வழங்க முடியும் என, மின் வாரிய அதிகாரிகள் கூறினர். இதற்கான பணி, இம்மாதம் துவங்க உள்ளது.

Advertisement