40 ஆண்டுகளாக போடப்படாத சாலை நிதி ஒதுக்கியும் ஊராட்சி அலட்சியம்

மேடவாக்கம்:மேடவாக்கத்தில், கடந்த 40 ஆண்டுகளாக அமைக்கப்படாத சாலையை அமைக்க நிதி ஒதுக்கியும், கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்குள்ள அன்னபூரணி தெரு, 85 மீட்டர் நீளமுடையது. இதில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

தவிர, இத்தெருவில் அன்னபூரணி கோவில் அமைந்துள்ளதால், அம்மனை தரிசிக்க, தினமும் 300க்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இருந்தும், 40 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல், மேடும் பள்ளமுமான மண் தரையாக, கூர்மையான கற்கள் நீட்டிக்கொண்டு உள்ளன. இதனால், பக்தர்கள் மற்றும் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, பலமுறை முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன்பின், 2024 செப்., 19 தேதியிட்ட பதில் மனுவில், 85 மீ., நீளத்திற்கு சாலை அமைக்க, 5.08 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, மேடவாக்கம் அன்னபூரணி தெருவில், சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement