தண்டவாளத்தை கடப்பதால் விபத்துகள் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மறைமலை நகர்:மறைமலை நகர் சாமியார் கேட் -- பேரமனுார் ரயில்வே கேட் இடையே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், தண்டவாளங்களை கடக்க உள்ள வழிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை தடத்தில், தினமும் 60 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 60 விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் தடத்தில், சிங்கபெருமாள் கோவில் -- மறைமலை நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில், பொது மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தண்டவாளத்தைக் கடப்பது, அமர்ந்து பேசுவது, நடை பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மறைமலை நகர் சாமியார் கேட் -- பேரமனுார் ரயில்வே கேட் இடையே, தினமும் நுாற்றுக்கணக்கானோர் ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்று வருகின்றனர்.
இதனால், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பேரமனுார், டென்சி பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் வருவது தெரியாமல், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
2022ம் ஆண்டு முதல், மூன்றாவது தடத்தில் ரயில்கள் இயக்கத் துவங்கியது முதல், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், இப்பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் ஒருவர், புறநகர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார்.
எனவே, இந்த பகுதியில் தண்டவாளங்களை கடக்க உள்ள வழிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!