பசுவுக்கு சிறப்பு சட்டம் இயற்றப்படுமா: பார்லியில் மத்திய அமைச்சர் பதில்

புதுடில்லி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த சட்டத்தையும் இயற்ற மத்திய அரசு திட்டமிடவில்லை என்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் இன்று பார்லியில் தெரிவித்தார்.
லோக்சபாவில் பசு பாதுகாப்பு குறித்து, பாஜ மூத்த தலைவரும் உத்தராகண்ட் முன்னாள் முதல்வருமான திரிவேந்திர சிங் ராவத்தின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து எஸ்.பி.சிங் பாகேல் கூறியதாவது:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சிகளை ஆதரிப்பதற்காக, மத்திய அரசு டிசம்பர் 2014 முதல் ராஷ்ட்ரிய கோகுல் மிஷனை செயல்படுத்தி வருகிறது.
பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த சட்டத்தையும் இயற்ற மத்திய அரசு திட்டமிடவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246(3) இன் படி, மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே சட்டமன்ற அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் கீழ், விலங்குகளைப் பாதுகாப்பது என்பது மாநில சட்டமன்றம் சட்டம் இயற்றும் பிரத்யேக அதிகாரங்களைக் கொண்ட ஒரு விஷயம்.
பால் உற்பத்தியைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பால் உற்பத்தியான 239.30 மில்லியன் டன்களில் பசுவின் பால் 53.12 சதவீதமாக இருந்ததாகவும், எருமைப் பால் 43.62 சதவீதமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்