அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் துளியும் அக்கறையில்லை: எச்சரிக்கிறார் நயினார்

சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் துளியும் அக்கறையில்லை என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது என்று திமுக மீது தமிழக பாஜ தலைவர் நயினார் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
அரை நுாற்றாண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தொடர் போராட்டத்தின் விளைவாக ஓராண்டுக்கு முன்பு பெயருக்கு செயல்படுத்திவிட்டு, பின்பு அதிலும் பல குளறுபடிகளை உட்புகுத்தியிருக்கிறது திமுக அரசு.
முந்தைய அதிமுக ஆட்சியிலேயே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் பெரும்பான்மையான பணிகள் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகளை சரியாக செயல்படுத்தாது இத்திட்டத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு ஆன பின்பும், இன்னும் பெருவாரியான குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்படவில்லை என்பது திமுக அரசின் நிர்வாகத்திறனின்மையையே காட்டுகிறது. திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம் குட்டைகளையும் இரண்டாம் கட்டமாக இணைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் இருப்பது இத்திட்டத்தில் திமுக அரசுக்கு துளியும் அக்கறையில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜ அறிவித்ததாலேயே திமுக அரசு திட்டத்தைத் தொடக்கி வைத்தது என்பது உலகறிந்த உண்மை. இன்னும் எத்தனை போராட்டங்களை பாஜ முன்னெடுத்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முக்கியத்துவம் திமுக அரசின் விழிகளுக்குப் புலப்படும்? போராடினால் மட்டும் தான் திமுக அரசு தனது கடமையை முறையாகச் செய்ய முன்வருமா?
திமுக அரசின் ஆட்சி முடிவதற்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் 10 நாட்களுக்குள் அத்திக்கடவு-அவிநாசித் திட்டம் சரிவர செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி தமிழக பாஜ சார்பாக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இனிமேலும் காலந்தாழ்த்தி கொங்கு மண்டல மக்களை வதைக்காது அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தமிழக பாஜவின் தீவிர நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும் என இறுதிகட்ட எச்சரிக்கையாக திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை:
என்னவானது நாய் இனப்பெருக்கக் கொள்கை
மாநில நாய் இனப்பெருக்கக் கொள்கை என்னவானது? அதற்கு ஒதுக்கப்படும் நிதி எங்கே போனது என்று மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டில் 20 பேர் நாய்க்கடியால் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதோடு ஆளும் திமுக அரசின் நிர்வாக லட்சணத்தையும் நமக்கு தோலுரித்துக் காட்டுகின்றன. நாட்டிலேயே நாய்க்கடியில் தமிழகத்தை முதலிடத்தில் தூக்கி நிறுத்தியது தான் திமுக அரசின் நான்காண்டு காலசாதனையா?
திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் ஏற்கனவே உயிர்பயத்தில் வாழம் தமிழக மக்கள். கட்டுக்கடங்காமல் பெருதி வரும் தேரூநாய்களின் தொல்லையால் தற்போது பொதுவெளியில் நடமாடுவதற்கே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெருவில் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தும் திராணியற்ற ஆளும் அரசு. நல்ல ரக நாய்களை நாங்களே விற்கிறோம் எனக் கிளம்பியுள்ளது வேடிக்கையானது.
தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னென்ன? அவர்களின் தேவை என்ன? ஒரு அரசின் கடமை என்ன? என்பது குறித்த சிந்தனை கூட இல்லாத திமுக அரசு. தங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகளைத் திட்டங்களாகத் தீட்டி, அதற்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி ஒரு சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு போட்டோஷுட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் முதல்வரை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள
மாட்டார்கள்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தெருநாய்களின் எண்ணிக்கையும் ரேபிஸ் பாதிப்புகளும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட “ மாநில நாய் இனப்பெருக்கக் கொள்கை” என்னவானது? ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் நலனுக்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி எங்கே போனது? அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி கிடைக்கிறதா? நாய்க்கடிக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா? தங்கள் மாநிலத்தின் தெருநாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்ற கேரள அரசை இதுவரைக் கண்டிக்காதது ஏன்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தையும், ரேபிஸ் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் திமுக அரசு துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசைக் கண்டித்து பல போராட்டங்களைத் தமிழக பாஜக முன்னெடுக்கும்!
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.