குடியுரிமை ஆவண விவகாரத்தில் தேர்தல் கமிஷன் சொல்வதே சரி: சுப்ரீம் கோர்ட் ஏற்பு

புதுடில்லி: ''ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறுவது சரியானது. அந்த ஆவணத்தை ஆய்வு செய்ய வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதனை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்ஷி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, ' ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது' என தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சூரியகாந்த் கூறியதாவது: '' ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறுவது சரியானது. அந்த ஆவணத்தை ஆய்வு செய்யப்பட வேண்டும்' என்றார்.
மேலும் நீதிபதி கூறுகையில், முதலில் இத்தகைய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு வரும். ஆனால், அவர்களுக்கு அதிகாரம் இருந்தால், பிரச்னை ஏதும் இருக்காது . இந்தப் பணிகள் சட்ட விரோதம் என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை ரத்து செய்வோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான கபில் சிபல் கூறுகையில், தேர்தல் கமிஷன் ஆதாரை ஏற்க மறுக்கிறது. நான் இந்தியன் என்று சொன்னால், அதனை நிரூபிக்க வேண்டிய வேண்டிய கூடுதல் சுமை எனக்கு ஏற்படுகிறது என்றார்.
நீதிபதி சூரியகாந்த்: இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க ஏதேனும் ஆவணம் இருக்கும். அனைவரும் சான்றிதழ் வைத்துள்ளனர். அது இருந்தால் தான் சிம் கார்டு வாங்க முடியும் என்றார்.
இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளையும் விவாதம் நடக்க உள்ளது.

















