கட்டாயத் தமிழ் மொழிப் பாடச் சட்டம் செயல்படுத்தப்படுமா: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை:கட்டாயத் தமிழ் மொழிப் பாடச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் 3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாநிலக் கல்விக்கொள்கை ஒருவழியாக தூசுத் தட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, 11-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து, எண்மக் கல்வி, காலநிலை மாற்றக் கல்வி போன்ற சில திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை வகுப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அதில் இடம் பெற்றிருந்த கல்வியாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் நிலையிலிருந்து திணிக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தையே மாநிலக் கொள்கையாக அளிக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதாகவும் குழுவில்இடம்பெற்றிருந்த ஜவஹர்நேசன் போன்ற கல்வியாளர்கள் குற்றச்சாட்டியிருந்ததனர். இது அப்போதே அதிர்வுகளை ஏற்படுத்தியது.
மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என்று பாமக பல முறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கையின் மீது கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துக் கேட்காத தமிழக அரசு, தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருக்கிறது. மாநிலக் கல்விக் கொள்கையில் அது அப்பட்டமாகத் தெரிகிறது. அதன் ஆங்கில வடிவத்திற்கும்,, தமிழ் வடிவத்திற்கும் ஆயிரமாயிரம் முரண்பாடுகள் உள்ளன.
மாநிலக் கல்விக் கொள்கையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது பள்ளிக்கல்வியில் தமிழ்க் கட்டாய பயிற்றுமொழியாக்கப்படுமா? 2006-ஆம் ஆண்டின் கட்டாயத் தமிழ் மொழிப் பாடச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்பது தான். இந்த இரு எதிர்பார்ப்புகளுமே ஏமாற்றத்தைத் தான் கொடுத்திருக்கின்றன. இது தமிழுக்கு திமுக இழைத்த துரோகமாகும்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் நோக்கத்துடன் கடந்த 2006-ஆம் ஆண்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சட்டம் கொண்டுவரப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும் நடப்பாண்டில் கூட 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இரு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதை விசாரணைக்குக் கொண்டு வரவும், வழக்கில் சாதகமானத் தீர்ப்பைப் பெற்று தமிழைத் தமிழகத்தில் கட்டாயப்பாடமாக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தமிழுக்கு திமுக அரசு செய்த 2வது துரோகமாகும்.
தமிழக அரசு புரட்சிகரமான தொரு மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு பதிலாக அரசு பள்ளிகளின் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு திருப்பி விடும் கொள்கையை தமிழக அரசு தயாரித்திருக்கிறது. அரசு பள்ளிகள மேலும் சீரழியவே இது வழிவகுக்கும்.
தாய்மொழியை ஊக்குவிக்காத, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள் தான். அந்த வகையில் தமிழக மாநிலக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.
